skip to main |
skip to sidebar
ஈழம் - ஓலம்!
வாழ்கையின் எதார்த்தம் சில சமயங்களில் மிக மோசமாக புரிந்து கொள்ளப் படுகிறது. அதன் வீரியம் ஒரு தனி நபரையோ அல்லது குழுவையோ வார்த்தைகளால் அசிங்க படுத்தி விடலாம் என்கிற அளவுக்கு மனம் வக்கிரம் கொண்டு விடுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு வார்த்தைகளால் தங்களின் வக்கிரத்தை வெளிப் படுத்தி கொள்பவர்கள் சம்பந்தப் பட்ட நிகழ்வையோ அல்லது விசயத்தையோ தங்கள் அறிந்து கொண்ட அளவில் அது தான் உண்மைஎனக் கருதி அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து அவர்களே ஒரு தீர்ப்பாக ஏதேனும் ஒன்றை சொல்லி விடுகிறார்கள்.
இது குறித்து என் எண்ணம் விரிவடையும் போது புத்தர் கதை ஒன்று நினைவுக்கு வருவதை பகிர்ந்துக் கொள்ள ஆவல். ஒரு முறை புத்தரும் அவரது சீடரும் அன்றைய நாளின் உணவிற்காக செல்கிறார்கள். துறவறத்தின் காரணமாக பிச்சை அல்லது தானம் பெற்று உணவு உண்பது வழக்கம். அந்த வகையில் தினந்தோறும் அன்னமிடும் பெண்மணி ஒருவர் அன்றைய நாளில் புத்தரை கடும் சொற்களால் கடிந்து கொள்கிறாள். இதை கேட்ட உடன் புத்தர் புன்முறுவலுடன் நகர்ந்து வேறிடம் செல்கிறார். அவரது சீடருக்கு அதிர்ச்சி மேலும் ஆச்சர்யம் வேறு மேலிடுகிறது. அடக்கமாட்டா ஆற்றாமையுடன் புத்தரிடமே அது குறித்து கேள்வி எழுப்புகிறார். அதற்கு புத்தரின் பதில் என்ன தெரியுமா? தினம்தோறும் அவள் அன்னம் இடுகிறாள் அல்லவா என்ற கேள்விக்கு மென்மையாக தலை அசைத்து ஆமோதிக்கும் சீடரிடம் தொடருகிறார். அவ்வாறு பிச்சை இடும் முன் அந்த அன்னம் அவளின் உடமை இட்ட பின்பு, அதை நாம் ஏற்று கொள்ளும் போது அது நமக்கானது. அது போல தான் இன்றைய தினம் அவளின் சுடு சொற்களை ஏற்றுக் கொள்ள வில்லை ஆகையாலே அந்த சொற்கள் அவளுக்கே சொந்தமாகி விடுகிறது. இதனை கேட்ட சீடன் மனம் அமைதி ஆகின்றது. மேலும் பக்குவ படுகிறது.
ஆனால், புத்த சமயத்தை தழுவி நிற்கும் இலங்கையில் நடக்கும் தொடர் நிகழ்வுகள் குறித்து நாம் எண்ணுகையில் அந்த புத்தருக்கே அமைதி தொலைந்து விடும் என்றே புரிகிறது. அனைத்து அடையாளங்களையும் (மொழி, இனம்) தவிர்த்து பார்த்தால் கூட மனிதம் தொலைந்த பூமி அது என்பதில் இரு வேறு கருத்து யாருக்கும் இருக்க முடியாது.
ஒற்றுமையை தொலைத்து தனித் தனி கருத்துக்களை பொது கருத்தாக்க முயன்று உண்மையை மறைக்கும் போலி தலைவர்கள் உலவும் நமது சமுதாயத்தில் நாமும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் அவலத்தை என்னவென்று சொல்வது?
பல்வேறு அரசியல் பின்னணிகள் கொண்டு உலக நாடுகளின் தந்திரங்களையும் சேர்த்து சுமக்கும் ஈழப் பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும் என்றால் தனிமனித நலன்களை பொது நலனாக வைக்கும் சில அரசியல் தலைவர்கள் மனம் மாறும் வரை விடியல் என்பது வெகு தூரம் தான்.
போலி முகங்களையும் தனி விருப்பு வெறுப்புகளை சுமந்து திரியும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ஈன பிறவிகள் ஈழ பிரச்சனைக்கு உதவுவார்களா? காலம் அடையாளம் காட்டும் என்ற அளவிலேயே நாம் நின்று விடாமல் மனிதம் காக்கப் பயணப் படுவோம்.
........தொடரும்
ம்பரூரவஸ்வி
அதிகமான பரபரப்பு.. எவ்ளோ காசு குடுத்தாலும் கிடைக்காத விளம்பரம்.. எல்லாம் கடந்து வந்த படம் என்பதால் இயல்பாகவே எனக்குள் உள்ள ஒரு சாமானிய ரசிகன் படத்த பார்க்க கூப்பிட்டு போக சொன்னான். நானும் படம் எல்லாம் பார்த்து ஒரு மூணு மாசம் ஆனதால கிளம்பிட்டேன். உலக நாயகன் என்றால் சும்மாவா? ஒரே ஆர்ப்பாட்டம்.. பழைய படங்கள் பேர் எல்லாம் நினைவுக்கு வரவைக்கிற ரசிக கண்மணிகள் போஸ்டர்ஸ். மெல்லிய உணர்ச்சி இழையோட கமலுக்காக வருத்தப்பட்ட மனசு பட காட்சிகளோட பயணிக்க ஆரம்பிச்சுது.
ஆரம்ப காட்சிகள் முடிய, கமல் கதக் நடனம் சொல்லி தரும் ஆசிரியராக வரும் காட்சிகளில் நீ நடிகன்யா என கத்தும் மனசு அடுத்து வரும் ஒரு சண்டை காட்சில் லயித்து போய் கமலை மனசார உச்சி முகர்கிறது. அதுக்கப்புறம் நகர்த்த படும் காட்சிகள் எல்லாம் தொழில் நுட்ப ரீதியா பலே..
அதுக்கப்புறம் எனக்குள்ள உள்ள சாமானிய ரசிகன் கேக்குற கேள்விக்கு பதில் எனக்கு சொல்ல தெரிந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்.
இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று கும்மியடிக்கும் பல படங்களில் இதுவும் ஒன்றா என்றால் கமல் ஸ்டைல்ல அப்படியும் சொல்லலாம் என்று சொல்லலாம். அட யாரா வேணும்னாலும் இருங்கப்பா ஆனா கலையை புரியும்படி சொல்லுங்க. கலைவடிவம் மக்களுக்கு போய் சேரணும்.
கவுண்டர் ஒரு படத்துல சொல்லுவாரு. அட எல்லாரும் சிரிக்கும் போது நாமளும் சிரிக்கறது இல்லையா? எல்லாரும் கை தட்டும் போது நாமளும் கை தட்டறது இல்லையா? - இது புரியாதவங்க இங்கிலீஷ் படம் பார்த்தா என்ன பண்ணனும் என்பதற்காக இன்றளவும் சொல்லப்படும் காமெடி. அப்படி தான் பல பேரு படம் பார்த்தாங்க என்பது படம் முடிஞ்ச பிறகு தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.
கலை தாகம் எடுக்கும் யாரும் ஏன் இரானிய வகை படம் எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என தெரியவில்லை. நுணுக்கமான உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் அத்தகைய படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவையாக இருப்பதில் யாருக்கும் உடன்பாடு இல்லையோ என்னவோ?
பிராமணன் மாமிசம் சாப்பிட மாட்டார்கள் என்று யார் சொல்வது? தமிழகத்தில் வேண்டுமானால் அவ்வாறு இருக்கலாம். மேற்கு வங்கத்தில் மற்றும் வேறு சில பகுதிகளில் உண்டாயிற்றே? தெளிவான கமல் இதை காட்சி படுத்தி இருக்கார். ஊசி முனையளவு உள்ள இந்த காட்சி கமல் பிரச்சனைகளின் போது கேடயம் பிடிக்க உதவியது.
தாலிபான்களை அவர்களின் பிற்போக்கு தனத்தை, மதத்தின் மீது உள்ள வெறியை கிளறும் கமல் அமெரிக்காவை தன் தலையில் கீரிடமாக தரித்து இருப்பது புருவம் உயர வைக்கிறது. மேலும் இஸ்லாமியர்களின் முன் வடிவமாக தாலிபான்களின் பிற்போக்கு தனத்தை சித்தரித்து அல்லது சித்தரிக்க முயற்சித்து இருப்பது கவலை அளிக்க கூடிய அம்சம்.
உயிர் போகும் இடத்தில ஒரு உதை வாங்கும் கமல் கிருஷ்ணா என்று அலறும் போது அவர்கள் அதை குறிப்பிடும் போது வேண்டும் என்றால் அல்லாஹ் என்று கத்துகிறேன் என்ற தொனியில் அல்லாஹ் என்று கத்துவது கமலுக்கே உரிய குசும்பு என்று தான் சொல்ல தோன்றுகிறது.
ஆப்கன் அழகா தெரியுது. அற்புதமான ஒளிப்பதிவு. தீவிரதவாதம் இருக்கும் இடங்கள் எல்லாம் அது ஏற்று கொள்ளப்பட்ட இடம் இல்லை எனவும் எல்லோரும் தெரிஞ்சுக்கணும். ஆப்கன் கூட தாலிபான்கள் கைவசம் இருக்கும் இடமே தவிர, தீவிரவாத இடம் அல்ல. இதையும் நாம புரிஞ்சுக்கணும். இது குறித்து விளக்கி இருந்தால் கமலுக்கு ஒரு ராயல் salute அடிச்சு இருக்கலாம்.
நளினத்த பெண்மையாய் பார்க்கும் மனைவியை தன் செய்கையால் மாற வைக்கும் ஹீரோ தனத்தை தனியாக கமல் முன் எடுக்காதது பெரிய ஆறுதல். பூஜா குமார் நல்ல selection. ஆனால் கமல் என்ற மனிதனுக்கு முன்னால் ஒன்றும் எடுபட வாய்ப்பு இல்லாமல் ஆகி விட்டது.
கதையை நகர்த்தி இருக்கும் விதத்தில் கமல் உள்ளே இருக்கும் டைரக்டர் ஜோரா ஆட்டம் போட்டு இருக்கார். ஆனால், காயின் இரண்டு பக்கமும் பார்க்காம ஒரு பக்கம் மட்டுமே பார்த்து இருக்கார் அதுவும் அமெரிக்க பூத கண்ணாடிய கொண்டு!
பிரமிப்பு, பிரமாண்டம் எல்லாம் குண்டு போட்ட பின்பு மண்ணோடு மண்ணாக ஆகும் கட்டிடம் போல வெளிய வந்ததும் மனசுல நிற்க மறுக்குது. ஏதோ மிஸ் ஆகுது.
கமல் என்ற மாபெரும் கலைஞரை ஆதரிப்பதில் தப்பு இல்லை. யாருக்கும் அதில் மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவர் கொண்ட ஒரு சாரார் சார்ந்த கொள்கையை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கமல் உருண்டு வர பந்தையே சிக்ஸர் அடிக்கிற ஆளு! இந்த படத்துக்காக ஏற்பட்ட பிரச்சனைகளோ பௌன்சர்கள்... சிக்ஸர் அடிச்சு ஜெயிச்சாச்சு!!
கடைசியா ஒண்ணு ... எல்லாத்தையும் சிரத்தையா செய்ற உலக நாயகன் ஏன் கதைய புரியும்படியா எடுக்கல என கேட்ட எனக்குள்ள உள்ள சாமானிய ரசிகன அப்பாவியா பார்த்தேன்.