ஈழம் - ஓலம்!
இது குறித்து என் எண்ணம் விரிவடையும் போது புத்தர் கதை ஒன்று நினைவுக்கு வருவதை பகிர்ந்துக் கொள்ள ஆவல். ஒரு முறை புத்தரும் அவரது சீடரும் அன்றைய நாளின் உணவிற்காக செல்கிறார்கள். துறவறத்தின் காரணமாக பிச்சை அல்லது தானம் பெற்று உணவு உண்பது வழக்கம். அந்த வகையில் தினந்தோறும் அன்னமிடும் பெண்மணி ஒருவர் அன்றைய நாளில் புத்தரை கடும் சொற்களால் கடிந்து கொள்கிறாள். இதை கேட்ட உடன் புத்தர் புன்முறுவலுடன் நகர்ந்து வேறிடம் செல்கிறார். அவரது சீடருக்கு அதிர்ச்சி மேலும் ஆச்சர்யம் வேறு மேலிடுகிறது. அடக்கமாட்டா ஆற்றாமையுடன் புத்தரிடமே அது குறித்து கேள்வி எழுப்புகிறார். அதற்கு புத்தரின் பதில் என்ன தெரியுமா? தினம்தோறும் அவள் அன்னம் இடுகிறாள் அல்லவா என்ற கேள்விக்கு மென்மையாக தலை அசைத்து ஆமோதிக்கும் சீடரிடம் தொடருகிறார். அவ்வாறு பிச்சை இடும் முன் அந்த அன்னம் அவளின் உடமை இட்ட பின்பு, அதை நாம் ஏற்று கொள்ளும் போது அது நமக்கானது. அது போல தான் இன்றைய தினம் அவளின் சுடு சொற்களை ஏற்றுக் கொள்ள வில்லை ஆகையாலே அந்த சொற்கள் அவளுக்கே சொந்தமாகி விடுகிறது. இதனை கேட்ட சீடன் மனம் அமைதி ஆகின்றது. மேலும் பக்குவ படுகிறது.
ஆனால், புத்த சமயத்தை தழுவி நிற்கும் இலங்கையில் நடக்கும் தொடர் நிகழ்வுகள் குறித்து நாம் எண்ணுகையில் அந்த புத்தருக்கே அமைதி தொலைந்து விடும் என்றே புரிகிறது. அனைத்து அடையாளங்களையும் (மொழி, இனம்) தவிர்த்து பார்த்தால் கூட மனிதம் தொலைந்த பூமி அது என்பதில் இரு வேறு கருத்து யாருக்கும் இருக்க முடியாது.
ஒற்றுமையை தொலைத்து தனித் தனி கருத்துக்களை பொது கருத்தாக்க முயன்று உண்மையை மறைக்கும் போலி தலைவர்கள் உலவும் நமது சமுதாயத்தில் நாமும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் அவலத்தை என்னவென்று சொல்வது?
பல்வேறு அரசியல் பின்னணிகள் கொண்டு உலக நாடுகளின் தந்திரங்களையும் சேர்த்து சுமக்கும் ஈழப் பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும் என்றால் தனிமனித நலன்களை பொது நலனாக வைக்கும் சில அரசியல் தலைவர்கள் மனம் மாறும் வரை விடியல் என்பது வெகு தூரம் தான்.
போலி முகங்களையும் தனி விருப்பு வெறுப்புகளை சுமந்து திரியும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ஈன பிறவிகள் ஈழ பிரச்சனைக்கு உதவுவார்களா? காலம் அடையாளம் காட்டும் என்ற அளவிலேயே நாம் நின்று விடாமல் மனிதம் காக்கப் பயணப் படுவோம்.
........தொடரும்
